Sensisoft எனும் நிறுவனத்தின் இணைய தளம் இது. வழக்கமான அளவில் இல்லாமல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தளம் இது. தொடுப்பை சொடுக்கி தளத்திற்கு செல்லலாம். |
இவ் வலைப்பதிவு கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு சார்ந்ததாக அமையும்.
14.3.09
இணைய தள வடிவமைப்புக்கு(Web Design) ஒரு அசத்தல் உதாரணம்
10.3.09
பெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே
பெங்களூரில் இருந்து ஓசூர் போகும் வழியில் பாதி தூரத்தில் உள்ளது, எலக்ட்ரானிக் சிட்டி. எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சிக்காலத்தில் எலக்ட்ரானிக், ஐ.டி. கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து ஆரம்பிக்கப்பட்ட இடம் இது. இதில் கம்பெனிகள் அதிகம் ஆக ஆக, இந்த சாலையில் பயணப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இந்த சாலைதான் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இருந்து பெங்களூர் வரும் வாகனங்களுக்கும் நுழைவு வாயில். இது போதாதா, வாகன நெரிசலுக்கு? அடிக்கடி இந்த ரோட்டுல போயிட்டு வந்தா காசநோய், தோல் வியாதி, பிரஷர் எல்லாம் வரும். அப்புறம் கொஞ்சம் நாள் கழிச்சி பொறுமை குணமும் கூடிடும்.
இதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ஓசூர் ரோடு எலிவேட்டட் ஹைவே பிராஜக்ட். ரோட்ட நல்லா விரிவாக்கி, ஒரு பாலத்தை கட்டுறதுதான் பிளான். பாலம் ஒரு கிலோமீட்டர், ரெண்டு கிலோமீட்டர் இல்ல, கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டருக்கு ஒரே பாலம். மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை, கர்நாடக அரசு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு போன்றவற்றின் கூட்டணியில் உருவாக்கப்படும் திட்டம் இது. ஆரம்பிச்சு வைச்சது மன்மோகன் சிங். 450 கோடி ரூபாய் செலவு. கட்டுனதுக்கப்புறம் வண்டியில போறவன்கிட்ட புடுங்கிடுவாங்க.
இந்த பாலம் கட்டுற விதம், எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மண்ணு, சல்லி, கம்பி, சிமெண்ட் எதுவும் ரோட்டுல கிடக்குறது இல்ல. எல்லாத்தையும் தனிதனியா வெவ்வேறு இடங்களில் செஞ்சு, இங்க வந்து பிக்ஸ் பண்ணிடுறாங்க. முதல்ல தூணை வைக்குறாங்க. அப்புறம் துண்டு துண்டா ஒட்டி பாலத்தை உருவாக்கிடுறாங்க.
ரெண்டு தூணுக்கிடையில் இவ்வளோ தூரத்தில எப்படி இத்தனை பாகங்களை சேர்த்து ஒண்ணா வைக்குறாங்க? அதுவும் எப்படி இப்படி நிக்குது?ன்னு எனக்கு ஆரம்பத்துல ஏகப்பட்ட சந்தேகம்.
மேட்டர் ஒண்ணுமில்லை. ஊசி நூலுல பாசி மணி கோர்க்குற மாதிரி, பாலம் கட்டுற டெக்னாலஜி இது.கண்ணுக்கே தெரியாத கம்பிதான் மெயினு.
இப்ப, ரோட்ட ஒரளவுக்கு பெரிசாக்குனதுக்கே கொஞ்சம் டிராபிக் குறைஞ்ச மாதிரி தான் இருக்கு. நாலு இடங்களில் சாலையை கடக்க, சப்வேயும் கட்டி இருக்காங்க. மத்தியான வெயில் நேரத்தில பாலத்துக்கு கீழேயே போனா, பத்து கிலோமீட்டருக்கு வெயில இருந்து தப்பிச்சிடலாம். மழை பெயும்போதும் அப்படியே. ஆனா, நான் மாட்டேன்ப்பா.
கீழே ரோட்டுல ஆறு லேன். மேலே பாலத்துல நாலு லேன். இது தவிர, ரெண்டு பக்கமும் சர்வீஸ் ரோடு. முக்கால் மணி நேர பயணத்தை, பத்து நிமிசமா இது குறைச்சிடுமாம். இந்த வகையில ரோடு பிளஸ் பாலம் கட்டுறது இதுதான் இந்தியாவில் முதல்முறைன்னு சொல்லிக்கிட்டாங்க.
ஆரம்பத்தில் ரெண்டு வருஷத்தில் முடிப்பதாக பிளான். நீண்டுக்கொண்டே செல்கிறது. இந்த வருடம் முடிந்துவிடும் என்றே தோன்றுகிறது.
இந்த பாதை முழுமையான செயல்பாட்டுக்கு வந்தபின், வாகன நெரிசல் இருக்காதுன்னு நினைச்சிட்டு இருக்காங்க. பார்ப்போம் என்ன நடக்குதுன்னு? பாலத்துக்கு மேல சிக்னல் வச்ச ஊருதானே இது?
நன்றி .சரவண குமரன்-குமரன் குடில்
14.1.09
மனித நேயம் vs விலங்கு நேயம்
இயந்திரமயமான நம் வாழ்க்கை பாதையிலே, நாம் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். எவருக்கு என்ன நடந்தாலும் நம்முடைய வேலைகளை பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கின்றோம். இதுதான் இயந்திர வாழ்க்கை என்கிறார்கள். மனிதம் என்ற ஒன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மனிதம் செத்துப்போய், மனிதன் என்ற பெயருடன் வாழ்வதில் என்ன பயன்...? அப்படி வாழ்பவர்கள்தான் இன்று உலகத்திலே அதிகமாக இருக்கின்றார்கள்.
குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறார்கள். இதில் பல மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் குரங்கிற்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனால்தான் முதல் பரிசோதனைகளுக்காக குரங்கினைப் பயன்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். இங்கு நான் சொல்ல வந்தது நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்.
பாதையிலே எவர் காயப்பட்டுக் கிடந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் அரிதே. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயந்திரமயமான வாழ்க்கையில் நின்று அடுத்தவன் பிரச்சினையைப் பற்றி யோசிப்பதற்கு நேரமின்மை. மற்றையது, தேவையில்லாத பிரச்சினைகளில் தலைபோட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோமா என்ற பயம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.
ஆனால், இந்தக் குரங்கினைப் பாருங்கள். தன்னுடைய குட்டி, வாகனத்தில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட குட்டியினைத் தாக்குவதற்கு நாய் முயற்சிக்கிறது. துணிந்து போராடி, நாயினை விரட்டியடிக்கிறது தாய்க்குரங்கு. இதுதான் தாய்மை என்பது. தன் உயிரைப் பணயம் வைத்தாவது தன் குழந்தையைக் காப்பவள் தாய். அந்தத் தாயின் அன்பிற்கு நிகர் வேறு எதுவுமே கிடையாது. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் அந்த அன்பு கிடைக்காது.
மனிதம் செத்துக்கொண்டிருக்கும் இயந்திர உலகில், இந்தக் குரங்கில் செயல் சற்று திருப்தியளிக்கிறதல்லவா?
Thanks .apmathan blog- Mathumathi
11.1.09
புதிய கண்டுபிடிப்பு(மனைவியுடன் கார் ஓட்டும் ஆண்களுக்காக)
சமிபத்தில் ஒரு நிறுவனம்,இந்த அருட்பெரும் ,இந்த நூற்றாண்டின் அரியதொரு கண்டுபிடிப்பினை நிகழ்த்தி உள்ளது....இந்த உபகரனதோடு வண்டி ஓட்டும் பொழுது விபத்துக்கள் வெகுவாக குறைக்க பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது....(உபயம் விஜயகாந்த் இல்லை)
7.1.09
விண்டோஸ் இயங்கு தளம் வரலாறு
| |
1) விண்டோஸ் 1.0
விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.
2) விண்டோஸ் 2.0
ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.
3) விண்டோஸ் 3.0
1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.
4) விண்டோஸ் 3.11
விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.
5) விண்டோஸ் 3.11 NT
32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.
6)விண்டோஸ் 95
1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.
7) விண்டோஸ் 98
விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.
8) விண்டோஸ் 2000
2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.
9) விண்டோஸ் ME
இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.
10) விண்டோஸ் XP
கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.
12)விண்டோஸ் விஸ்டா
பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.
13) விண்டோஸ் 7
வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.
நன்றி: விக்கி,பிரேம்ஜி
20.12.08
Sky walk Bridge- USA
இதுக்கு மேல நடந்து பாக்கறீங்களா?
கண்ணாடியாலான ஒரு பாலத்தை கொலராடோ ஆற்றிற்கு மேலாக கட்டியிருக்கிறார்கள். Sky walk Bridge என பெயர். அட, ஆத்துக்கு மேலதா பாலம் கட்டுவாங்க. இதுல என்ன இருக்குனு கேக்குறீங்களா?
கடல்மட்டத்திலிருந்து 4000அடி உயரத்துல கட்டிருக்காங்க
71 போயிங் 747 விமானங்களை முழு பாரத்தோடு தாங்கவல்லது ( பயணிகளோடு )
அங்கே கிட்டத்தட்ட 8 வெவ்வேறான திசைகளிலிருந்து 100மைல் வேகத்தில் காற்று வீசும்.
1 மில்லியன் பவுண்டு எடையுள்ள இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.
”U” வடிவில் இருக்கும் வளைவு 70அடி நீளமுள்ளது
$25 மட்டுமே நுளைவுக் கட்டணம் ( பிரயாண செலவு எப்படினு எங்கயும் போடலை )
மார்ச் 28,2007 இலிருந்து பார்வையாளருக்கு திறந்திருக்கிறார்கள். ஆனா இப்போது நண்பரிடமிருந்து இமெயில் வரும்வரைக்கும் எனக்கு தெரியாது.
இதுக்கான பட்ஜெட் $30மில்லியன்
2004ல் ஆரம்பித்திருக்கிறார்கள்
படங்கள பாருங்க!!!
இமெயில்ல பாத்துட்டு இத பத்தி தேடினா இந்த வெப் கிடச்சுது.
இங்க இது மாதிரி நிறய்ய கட்டட விபரங்களை கொட்டி தந்திருக்காங்க.
7.12.08
டாடா ஸ்கை ப்ளஸ்

டிவியில் வரும் லைவ் நிகழ்ச்சிகளைக் கூட ரீவைண்ட் செய்து பார்க்கும் வசதியுடன் டாட்டா நிறுவனம் டாட்டா ஸ்கை ப்ளஸ் என்ற சேவையைக் கொண்டு வந்துள்ளது. இதற்கென வழங்கப்படும் செட் டாப் பாக்ஸ், டிவி நிகழ்ச்சிகளைத் தேவைப்படும்போது நிறுத்திப் பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் வசதி, ரீவைண்ட் செய்து நாம் விரும்பும் இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஆகியவற்றைத்தருகிறது. ஆம், நேரடியாக மைதானத்திலிருந்து ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியை லைவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா! இடையே தேடி வரும் நண்பரைத் தவிர்ப்பதற்காக இன்னொரு ரூமுக்குள் சென்று ஒளிந்து கொள்ள திட்டமா? போட்டி நிகழ்ச்சியை அப்படியே தற்காலிகமாக நிறுத்திப் பின் அவர் போன பின்பு மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க் கலாம். ஆச்சரியமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.
1990 ஆம் ஆண்டு வாக்கில் பல வீடுகளில் டிவியும் வி.சி.ஆர் எனப்படும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்திடும் சாதனமும் பெருகி இடம் பிடித்தன. வி.சி.ஆர். சாதனமும் வீடியோ டேப்பும் அடங்கக் கூடிய விலையில் கிடைத்ததால் எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் வீட்டில் இல்லாத போது ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்கு வி.சி.ஆர் சாதனத்தை புரோகிராம் செய்வது சற்று கடினமாக இருந்து வந்தது. ஆனால் டிவிடி பிளேயர் வந்தவுடன் இவற்றின் பயன்பாடு முற்றிலுமாக காணாமல் போனது. ஆனால் நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகையில் பதிய வேறு சாதனம் கிடைக்காமல் இருந்தது.
2008 ஆம் ஆண்டிலிருந்து செட்டாப் பாக்ஸ்கள் வெளியாகி நமக்குக் கை கொடுத்தன. இப்போது அனைத்து வீடுகளிலும் இது இடம் பெறத் தொடங்கி உள்ளன. இந்த பாக்ஸ் மூலம் நாம் விரும்பும் டிவி சேனல்களை நேரடியாகப் பெற்று பார்க்க முடிகிறது. இந்த வகையில் செட் டாப் பாக்ஸில் வியத்தகு முன்னேற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது டாட்டா ஸ்கை ப்ளஸ் சேவை. இதன் மூலம் டிவி சேனல்களைமட்டுமின்றி முன்பு நாம் வி.சி.ஆர். மூலம் மேற்கொண்ட வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. கீழ்க்காணும் வசதிகள் இதன் மூலம் தரப்படுகின்றன.
லைவ் நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திப் பின் விட்ட இடத்திலிருந்து தொடர்தல், இரண்டு புரோகிராம்களை ஒரே நேரத்தில் பதிந்து கொள்ளும் வசதி; அல்லது ஒன்றைப் பார்க்கும் நேரத்தில் மற்றதைப் பதிந்து கொள்ளும் வசதி. எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் இயங்கும் வசதி. சீரியல் நிகழ்ச்சிகளைத் தானாகப் பதியும் வசதி.
தற்காலிகமாக நிறுத்தலாம்; ஆனால் எப்படி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் என்பது பலரின் மனதில் எழும் கேள்வி, இல்லையா? இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்.
நீங்கள் எப்போது ஒரு சேனலை ட்யூன் செய்தாலும் உள்ளே உள்ள பபர் மெமரி எனப்படும் தற்காலிக நினைவகம் நிகழ்ச்சியினை சேவ் செய்திடத் தொடங்குகிறது. நீங்கள் அதனை ரெகார்ட் செய்கிறீர்களோ இல்லையோ, பபர் மெமரியில் நிகழ்ச்சி பதிவாகிறது. ஆனால் நீங்கள் அடுத்த சேனலுக்கு மாறினால் உடனே முந்தைய சேனலின் பதிவான நிகழ்ச்சிகள் அழிக்கப்பட்டு மாறிய சேனலின் நிகழ்ச்சிகள் பதிவு பெறத் தொடங்குகின்றன. எனவே மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஒரு சேனலுக்கு மட்டுமே கிடைக்கிறது.
இந்த டாட்டா ஸ்கை ப்ளஸ் உள்ளே 160 ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டுள்ளது. இதில் 45 மணி நேர வீடியோ நிகழ்ச்சிகளைப் பதிந்து வைக்கலாம். உள்ளே இரண்டு ட்யூனர்கள் இருப்பதால் இரு வேறு நிகழ்ச்சிகளை இதில் பதியலாம். பின் நேரம் இருக்கையில் மீண்டும் இவற்றைப் பார்க்கலாம்.
சீரியல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது குறித்துப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் பதிவு செய்திட விரும்பினால் அதற்கான வசதியை இந்த செட் டாப் பாக்ஸ் கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை உங்களுக்குப் பிடித்த பக்தி அல்லது அரசியல் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிட்ட சேனலில் ஒளி பரப்புவதாக வைத்துக் கொள்வோம். இந்த வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு வாரமும் அந்த நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சியைப் பதியும் படி செட் செய்திடலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் அது பதிவு செய்யப்படும்.
பழைய டாட்டா ஸ்கை செட்டாப் பாக்ஸ் எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. ஸ்கை ப்ளஸ் செட் டாப் பாக்ஸ் இப்போது அதிவேகமாகப் பரவி வரும் எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.
இது ஒரு கம்ப்ரஸன் ஸ்டாண்டர்ட் தான். இதனால் ஏற்கனவே கிடைத்து வரும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் துல்லிதமான சிறந்த ஒளி பரப்பு கிடைக்கும் என்றில்லை. தொழில் நுட்பத்தில் தான் வேறுபாடு. ஏற்கனவே எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் வரும் நிகழ்ச்சிகளும் சிறப்பாகவே கிடைத்து வருகின்றன.
அருமையான கருப்பு வண்ணத்தில் இந்த செட் டாப் பாக்ஸ் ப்ளஸ் கிடைக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து எல்.சி.டி. டிவிக்களுடன் இது இணைந்து செல்லும். உடன் வரும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம் பழையதைப் போலவே காட்சி அளித்தாலும் கூடுதலாகப் பல பட்டன்கள் தரப்பட்டுள்ளன. பிளே / தற்காலிக நிறுத்தம், பார்வேர்ட் / ரீவைண்ட், ரெகார்ட் மற்றும் பிளான் செய்திட பட்டன்கள் தரப்பட்டுள்ளன. நிறைய போர்ட்கள் தரப்பட்டுள்ளன.
எஸ்–வீடியோ, கோ–ஆக்ஸியல், எஸ்பி டி.ஐ.எப்., ஆகிய சாதனங்களுக்கான போர்ட்கள் தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி., ஈதர்நெட், மோடம் ஆகியவற்றிற்கானவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இதன் யூசர் இன்டர்பேஸ் பழைய டாட்டா ஸ்கை ரிமோட் போலவே உள்ளது. பார்ப்பதற்கு கண்கவர் தோற்றத்தில் பழகுவதற்கு எளிதாகவும் உள்ளது. டிவி நிகழ்ச்சியினைத் தேர்ந்தெடுத்து ரெகார்ட் செய்யத் தொடங்கியவுடன் என வட்டமாக ‘R’ ஒளி தெரிகிறது. எவ்வளவு நேரம் ரெகார்டிங் நடைபெற்றுள்ளது என்றும் தொடர்ந்து காட்டப் படுகிறது. பிளான் மெனு மூலம் ஏற்கனவே ரெகார்ட் செய்த நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம்.
பதிவு செய்த நிகழ்ச்சிகளில் எவை எல்லாம் பார்க்கப்பட்டது எனவும் அறியலாம். டிஸ்க் ஸ்பேஸ் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு மீதம் எனவும் அறியலாம். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என நீங்கள் விரும்பினால் அவற்றிற்கு 4 இலக்க கோட் எண்கள் கொடுத்து பாதுகாக்கலாம்.
இன்ஸ்டலேஷன், ஆக்டிவேஷன் கட்டணங்கள் அனைத்தும் சேர்ந்து ரூ.10,000 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டாட்டா ஸ்கை ப்ளஸ் பயன்படுத்த மாதக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.
அறிமுகச் சலுகையாக இந்த கட்டணம் வாழ் நாள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாட்டா ஸ்கை வைத்திருப்பவர்கள் இதற்கு மாறிக் கொள்ள ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையில் கட்டணம் செலுத்தி மாறிக் கொள்ளலாம். மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கான கட்டணம் சற்று அதிகம் தான். ஆனால் இத்தகைய சர்வீஸ் தற்போதைக்கு டாட்டா நிறுவனம் ஒன்று தான் தருவதால் வேறு வழியில்லை. ஒப்பிடவும் முடியாது. வரும் மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணம் இல்லை என்பதால் இது போன்ற ஒன்றை வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் இதனை வாங்கலாம். எனக்குப் பிடித்த சேனலை இவன் பார்க்க விட மாட்டேங்கிறான் என சிறுவர்களுக்குள் மட்டுமல்ல, மாமனார் மருமகள் இடையே கூட வீடுகளில் சண்டை நடக்கிறது; மன வருத்தம் ஏற்படுகிறது. இந்த வருத்தங்கள் இல்லாமல் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இதற்கு செலவழிப்பது ஒன்றும் வீணாகாது.