25.6.08

கடிவாளங்கள்


இன்று வீட்டுக்கு வீடு கணிணி.30 வருடத்திற்கு முன்பு இப்படி வீட்டுக்கு வீடெல்லாம் கம்ப்யூட்டர் வருமென்று யாராவது கனவு கண்டார்களா? தெரியாது. நாசாவிலும், ஆராய்ச்சிக் கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் மட்டுமே இருக்கும் விலையுயர்ந்த மிருகமாக அது அப்போது கருதப்பட்டது.

இன்று நடு அறை கணிணியில் அப்பா பிபிசியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்க உத்து பாக்குது குட்டிப் பாப்பா. தாத்தா கிரிக்கெட் ஸ்கோர் கேட்டு வந்து நிற்கின்றார். பாட்டிக்கு யூ.கேயிலுள்ள தன் தங்கையை வெப்கேமில் பார்க்க ஆசை. கான்எடிசனுக்கு (மின்சாரத்துக்கு) பணம் கட்டுவது காம்கேஸ்டுக்கு (இணையம்) பணம் கட்டுவது என அம்மாவுக்கு தலைக்கு மேல் வேலையுள்ளது. எல்லாம் கணிணி வழிதான்.

இப்படி டி.வி போல் நம் குடும்பத்தில் புதுசாய் அங்கமாகிப்போன கணிணியை நம் குடும்பத்துக்கு ஏற்ற நண்பனாக மாற்ற சில கடிவாளங்கள் நாம் போட வேண்டியுள்ளது. அறிந்தோ அறியாமலோ நம் வீட்டு சிறுசுகள் தவறாக தவறான தளங்களுக்கு செல்ல அல்லது வயதுவந்தோர்க்கான தளங்களுக்கு சென்றுவிட வாய்ப்புகள் உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள், அசிங்கங்கள், மர்ம நபர்கள், ஜாதிமதபேத வெறிகள் இதிலிருந்தெல்லாம் நம் குழந்தைகளை கொஞ்ச காலமாவது விலக்கிவைத்திருக்கலாம் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் விருப்பமாகவே இருக்கும். நீங்களும் அப்படிப்பட்ட ஒரு பெற்றோரானால் உங்கள் கணிணிக்கு இலவசமாய் கடிவாளம் போடலாம்.எப்படி?

ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உணர்ந்த Blue Coat Systems எனும் நிறுவனம் K9webprotection எனும் மென்பொருளை அனைத்து பெற்றோர்களுக்கும் இலவசமாய் வழங்குகின்றார்கள். இம்மென்பொருளை நீங்கள் இறக்கம் செய்து உங்கள் கணிணில் நிறுவினால் நிச்சயம் ஒரு பாதுகாப்பை உணர்வீர்கள். அடிப்படையிலேயே பல தளங்களை தடைசெய்யும் இம்மென்பொருளை உங்கள் விருப்பற்றிற்கு ஏற்றார் போல் கூடுதல் தளங்களை கூட்டவோ அல்லது சில தளங்களின் மீதான தடையை நீக்கவோ செய்து கொள்ளலாம். தவறுதலாக அவர்கள் மோசமான இணையதளம் பக்கம் போனால் "Prohibited" screen வரும் அல்லது ஒரு குரைக்கும் நாய் வருமாறு செய்யலாம். நீங்கள் உசாராகி விடலாமே?.

கீழ்கண்ட சுட்டியிலிருந்து நீங்கள் இறக்கம் செய்துகொள்ளலாம்.
(Free registration required to get the License)

http://www.getk9.com

பொதுவாக உங்கள் வீட்டு கணிணியை எல்லாருக்கும் தெரியும் வகையில் ஒரு பொது அறையில் வைப்பது நல்லது, அது போல குழந்தைகளுக்கு சில நடைமுறை அபாயங்களை சொல்லிக்கொடுப்பதும் தேவையே, உதாரணமாக சாட் ரூம் பேச்சுக்கள், முகமறியாதோரிடம் விலாசம் தொலைப்பேசி எண்கள் கொடுப்பதின் அபாயம் போன்றவற்றை சொல்லிகொடுத்து உசார் படுத்தி வைத்தல் எப்போதுமே நல்லது.