வலையுலகில் நல்ல பசங்ககளுக்கும் கெட்டப் பசங்ககளுக்கும் உள்ள தொடர் போரில் யார் வெற்றி பெறப் போகின்றார்கள் என்பது இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.
நல்ல பசங்க எட்டடி பாய்ந்தால், எங்கோ கணிணியே கதி என்று பேஸ்மென்டில் கிடக்கும் கெட்ட பயல்கள் பதினாறடி பாய்கின்றனர். முன்பெல்லாம் கணிணி ஹேக்கிங் என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் ஆர்வமாகவும் பொழுது போக்காகவுமே இருந்து வந்தது. இப்போது அது முற்றிலும் உருமாறி வணிக ரீதியாகிக் கொண்டிருக்கின்றது. பேட்டை ரவுடிகளைப் போல் போட்டி பொறாமை உள்ள எதிரிகள் மீது கெட்ட பசங்ககளை ஏவிவிட்டுவிட்டு பின்பு அவர்களை காசுகொடுத்து சரிபண்ணுவது வரைக்கும் வந்துவிட்டது.
முன்பெல்லாம் கணிணி வைரஸ்கள் உங்கள் கணிணியை தின்பதை பார்த்து, பெரு நிறுவனங்களை கலங்கடித்ததை பார்த்து அதை உருவாக்கியோர் மகிழ்ந்தனர். அதோடு விட்டு விட்டனர். இப்போது கணிணி வைரஸ் வழியாயும் ஏதாவது காசு பண்ணமுடியுமா வென்று பார்க்கின்றார்கள். விசேஷ நாட்கள் தோறும் மின்னஞ்சல் வாழ்த்து வடிவில் உலா வரும் இன்றைய புகழ்பெற்ற ஸ்டார்ம் வைரஸ் (Strom worm) உங்கள் கணிணியில் வந்து விட்டால் அவ்வளவு தான்.
அமைதியாய் இருந்துகொண்டு இணையம் வழி உங்களுக்கு பல விளம்பரங்களை பாப் செய்து காட்டுமாம். அது வழி அதை படைத்தோர் காசு பண்ணுகின்றார்கள்.தினமும் 2 மில்லியன் டாலர்கள். எப்படி இருக்குது கதை.
ஒரு இணையதளம் நம்பத்தகுந்த இணையதளம் தானா அதில் காசுகொடுக்கல் வாங்கல் தைரியமாக வைச்சுக்கலாமா இதை எப்படி கண்டறிவது? நல்ல பசங்க எல்லாம் ஒன்று சேர்ந்து Extended Validation SSL certificates -ன்னு ஒன்று கொண்டு வந்திருக்கின்றார்கள். பயந்துடாதீங்க. எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டிய அத்யாவசிய விஷயம் தான் இது.
அதாவது நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7 வைத்திருந்தால் அதில் போய் www.paypal.com என டைப்புங்கள். சட்டென மேலிருக்கும் அந்த விலாசச்சட்டம் பச்சை நிறத்தில் மாறும். அதாவது பேபால் இணையதளம் பாதுகாப்பான இணையதளம். நீங்கள் பாதுகாப்பான இணைய பக்கத்தில் தான் இருக்கின்றீர்கள் என அது காட்டுகின்றதாம்.
பழைய SSL certificate உள்ள தளங்களில் பூட்டு ஒன்று தோன்றும் அது வழி அது பாதுகாப்பான இணைய பக்கம் என தெரிந்து கொள்ளலாம். ஆனால் அந்த விஷயம் கணிணியில் நாலும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.சராசரிகளுக்கு தெரியாதல்லவா அதனால் தான் இப்படி கலர் போட்டு காட்ட முடிவெடுத்திருக்கின்றார்கள்.புதிதாக வெளிவரவிருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 3-ம் இது மாதிரி பச்சை வண்ணம் காட்டுமாம்.
ஆக இனி அட்ரஸ்பாரில் பச்சைவண்ணம் இருக்கும் வரை அப்பக்கத்தை நம்பி உங்கள் கடவுசொல்லை தட்டலாம். பச்சைநிறமில்லாவிட்டால்... உஷார் அது பிஷ்ஷிங்(போலி) சைட்டாக கூட இருக்கலாம்.இது சற்று புதிய தொழில் நுட்பமாதலால் அநேக வணிக இணையதளங்கள் இப்போதுதான் இதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
சீப்பாகவும் எளிதாகவும் பழைய SSL certificate-கள் கிடைப்பதால் சமீபகாலமாக பல போலி தளங்கள் கூட அவைகளை வாங்கி பிரவுசரில் பூட்டு படம் காட்டி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதால் நல்ல பசங்க இதுமாதிரி Extended Validation SSL certificates கொணாந்திருக்கிறார்கள்.
ஒரு EV சர்டிபிக்கேட் வாங்குவதற்குள் உயிர்போய்விடுமாம். ஏகப்பட்ட விலை. கன்னா பின்னாவென சோதனை சரிபார்த்தல் இருக்குமாதலால் கெட்டபசங்க கொஞ்சம் அடங்கி கிடப்பார்கள் என்பது நல்லதுகளின் எண்ணம்.
மரியாதைக்குரிய பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களிடம் இதைச் சொன்னால் "அட இதெல்லாம் வெளங்குமாய்யா" என்பார். :)
thanks pkp