உலகின் 90சதவிகித கணினிகளில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயங்குதளம்(Operating System)முதல் பதிப்பிலிருந்து,வரப்போகும் விண்டோஸ் 7 வரை அடைந்துள்ள மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களை படங்கள் மூலம் சுவாரஸ்யமாக அலசலாம்.
1) விண்டோஸ் 1.0
விண்டோஸ் இயங்கு தளத்தின் முதல் 7 பதிப்பை 1983 ஆம் ஆண்டிலேயே பில் கேட்ஸ் அறிவித்திருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்துடனான சட்ட சிக்கலில் மாட்டிகொண்டதால் 1985 ஆம் ஆண்டு தான் அறிமுகமானது. MS-DOS இயங்கு தளத்தின் நீட்டிப்பு போன்றே காணப்பட்ட இந்த இயங்கு தளம் தோல்வியடைந்தாலும் மல்டி டாஸ்கிங் மற்றும் சுட்டிக்கு(Mouse) ஆதரவு தந்தது.

2) விண்டோஸ் 2.0
ஆப்பிள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஆப்பிளின் மேக் இயங்குதளத்தின் சில வசதிகளை விண்டோஸ் 2.0 இல் அறிமுகம் செய்தது. இருந்தும் ஒப்பந்தத்தை மீறி 170 காப்புரிமை பெறாத வசதிகளை பயன்படுத்தியதாக மைக்ரோசாப்ட்டை, ஆப்பிள் நீதிமன்றத்திற்கு இழுத்தது தனிக்கதை.

3) விண்டோஸ் 3.0
1990 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. நினைவகத்தை சிறப்பாக கையாண்ட, புதிய வடிவில் வெளிவந்த இந்த பதிப்பே விண்டோசின் முதல் வெற்றிகரமான பதிப்பு. இரண்டு வருடங்களில் ஒரு கோடி வட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. இதன் பிறகே மைக்ரோசாப்ட் தன் முழு கவனத்தையும் இயங்கு தள சந்தையில் செலுத்தியது.

4) விண்டோஸ் 3.11
விண்டோஸ் 3.0 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பே இது. பல் ஊடக(Multimedia)வசதிகள் அதிகப்படுத்தப்பட்டு வெளியானது.

5) விண்டோஸ் 3.11 NT
32 பிட் ப்ராசசர்களுக்காக உருவாக்கப்பட இந்த பதிப்பு,பொறியாளர்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்பட்டதால் அவ்வளவாக வரவேற்பில்லாமல் போனது.

6)விண்டோஸ் 95
1995 ஆம் ஆண்டு வெளியான இந்த பதிப்பு பெரும் வெற்றி பெற்று உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்த்தது. இந்த பதிப்பில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இணைய உலாவியும் சேர்ந்தே வந்தது.ஸ்டார்ட் பொத்தான்,டாஸ்க் பார் போன்ற வசதிகள் இந்த பதிப்பிலிருந்தே ஆரம்பித்தது.

7) விண்டோஸ் 98
விண்டோஸ் 95 ஐ ஒப்பு நோக்கும்போது சற்று மேம்படுத்தப்பட்டு, FAT 32 கோப்பு வசதியுடன்,எக்ஸ்ப்ளோரர் உலாவி உள்ளீடு செய்யப்பட்டு வெளிவந்தது.

8) விண்டோஸ் 2000
2000 ஆம் ஆண்டு வெளியான NT வரிசை பதிப்புகளில் மேம்படுத்தப்பட்ட பதிப்பு.

9) விண்டோஸ் ME
இந்த வரிசையில் ஒரு தவறுதலான பதிப்பாக கருதப்படும் ME 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. பாதுகாப்பு குறைபாடுகள், உறுதியற்ற தன்மையுடன் இருந்த இந்த பதிப்பு படு தோல்வியடைந்தது.

10) விண்டோஸ் XP
கோப்புகள் மேலாண்மை(File Management),பாதுகாப்பு,உறுதி,வேகம் என அனைத்து பிரிவுகளிலும் மேம்படுத்தப்பட்டு 2001 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரை அலுவலகங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது.

12)விண்டோஸ் விஸ்டா
பார்வைக்கு புதிய மெருகோடு 2007 ஜனவரி மாதம் வெளியானது. பல மென்பொருட்கள் இந்த பதிப்போடு சரிவர இயங்காததால், மிக அதிக நினைவகத்தை எடுத்து கொள்வதால் பலர் விண்டோஸ் xp பதிப்பையே வைத்து கொண்டுள்ளனர்.

13) விண்டோஸ் 7
வெளியாகும் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், சென்ற வாரம் சில டோரன்ட்(Torrent) தளங்களில் முறையற்ற பதிப்பு வெளியாகிவிட்டது. மற்றெந்த பதிப்புகளையும் விட வேகமானதாகவும் இருப்பதாக நம்பப்படுகிறது.

நன்றி: விக்கி,பிரேம்ஜி