இவ் வலைப்பதிவு கணினி,தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிகழ்வுகள் பொழுது போக்கு சார்ந்ததாக அமையும்.
7.7.08
சாதனை படைத்த பயர்பாக்ஸ்
சென்ற ஜூன் 17ல் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பதிப்பு 3 வெளியானது. கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், புதிய பல வசதிகள், தோற்றப் பொலிவு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் முறை எனப் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான இந்த தொகுப்பின் வெளியீடும் சாதனை படைத்துள்ளது. வெளியான நாளன்று அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட புரோகிராம் என்ற பெயரை எடுத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது. இதற்கான ஏற்பாடுகள் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் மேற் கொள்ளப் பட்டு வெற்றிகரமாக இச்சாதனை மேற் கொள்ளப்பட்டது.
சாதனை தொடங்கிய ஐந்து மணி நேரத்தில் உலகின் பல நாடுகளிலிருந்து கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் எக்கச்சக்க எண்ணிக்கையில் டவுண்லோட் செய்தனர். எந்த நொடியிலும் இறக்கம் செய்வது நிற்கவே இல்லை. குறிப்பிட்ட நாளில் 83 லட்சம் பேர் டவுண்லோட் செய்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது. இந்தியாவிலிருந்து 2 லட்சத்து 57 ஆயிரத்து 353 பேர் பங்கு கொண்டு இந்த பிரவுசர் தொகுப்பை இறக்கிப் பயன்படுத்தினார்கள். அமெரிக்காவில் தான் மிக அதிகமாக 50 லட்சத்து 18 ஆயிரத்து 241 பேர் டவுண்லோட் செய்தனர்.
பிரிட்டனில் 7 லட்சத்து 26 ஆயிரத்து 232 பேர் கலந்து கொண்டனர். இப்படியே உலகெங்கும் உள்ள நாடுகளிலிருந்து பல லட்சம் பேர் ஆவலுடன் கலந்து கொண்டு இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளனர். எந்த எந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேர் கலந்து கொண்டனர் என்ற தகவல்களுக்கு http://www.spreadfirefox.com/enUS/ worldrecord/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.
பயர்பாக்ஸ் சில தகவல்கள்:
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் நம்பகத்தன்மை குறைய குறைய பயர்பாக்ஸ் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு மக்கள் புதியதொரு பிரவுசரை விரும்பினார்கள். அவர்களுக்கு வேகமாகவும் பாதுகாப்பாகவும் அதே சமயத்தில் பல புதிய நவீன வசதிகளைத் தருவதாகவும் பயர்பாக்ஸ் பிரவுசர் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது. வெகு காலமாக பயர்பாக்ஸ் தொகுப்பு 2 பயன்படுத்தப்பட்டு வந்தது. புதிய பதிப்பு 3 பல கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு இணையாகவும் போட்டியாகவும் பல புதுமைகளைக் கொண்டதாகவும் பயர்பாக்ஸ் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஓப்பன் சோர்ஸ் புரோகிராம்களை வழங்குவதில் புகழ் பெற்ற மொஸில்லா நிறுவனம் தரும் புரோகிராம் இது. ஓப்பன் சோர்ஸ் என்பதால் இதன் புரோகிராம் வரிகளைப் பெற்று யாரும் இதற்கான கூடுதல் வசதிகளைத் தரும் பிளக் இன் புரோகிராம்களை எழுதி வழங்கலாம். தொடர்ந்து இவ்வாறு பலர் வழங்கி வருகின்றனர்.
விண்டோஸ், லினக்ஸ், மேக் என பலவகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டு கிடைக்கின்றன. இலவசமாக இதனை டவுண்லோட் செய்திட http://www.getfirefox.com என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகலாம். விண்டோஸ் சிஸ்டத்திற்கான இன்ஸ்டலேஷன் பைல் (ஆங்கிலம்) 7.1 எம்பி அளவில் கிடைக்கிறது. வெகு எளிதாக இன்ஸ்டலேஷன் நடைபெறுகிறது. ஒரு புதிய எக்ஸ்பி சிஸ்டத்தில் இது 20 நொடிகளே எடுத்துக் கொள்கிறது.
நூற்றுக்கணக்கில் பொறியியல் வல்லுநர்கள் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி மேற்கொண்டு 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட தடைகளையும் பிழைகளையும் சரி செய்து பயர்பாக்ஸ் பதிப்பு 3 ஐக் கொண்டு வந்துள்ளனர்.
புதிய ஜெக்கோ பிரவுசர் இன்ஜின், பல்வேறு கூடுதல் திறன் கொண்ட புதிய வசதிகள், அதிவேகத்தில் தளங்களைப் பெற்று தருதல், கம்ப்யூட்டரின் மெமரியைக் குறைந்த அளவில் பயன்படுத்துதல், வியக்க வைக்கும் அட்ரஸ் பார் எனப் பல வசதிகள் தரப்பட்டுள்ளன. பயர்பாக்ஸ் இந்த அட்ரஸ் பாரினை ஆங்கிலத்தில் Awesome Ba என அழைக்கிறது.
நீங்கள் தேடும் வெப்சைட் முகவரி இதுவாகத்தான் இருக்கும் என சட சட வென பல தளங்களைப் பட்டியலிடும் புதிய வகை அட்ரஸ் பார் இணைய தேடலில் நமக்குக் கிடைத்திருக்கும் புதிய வசதியாகும். அட்ரஸ் பாரில் நீங்கள் முகவரியினை டைப் செய்திடும்போது ஏற்கனவே டைப் செய்த முகவரிகளை மட்டும் தான் தற்போதுள்ள பிரவுசர்கள் தருகின்றன. ஆனால் பயர்பாக்ஸ் தொகுப்பின் அட்ரஸ் பாரில் முகவரிகளை டைப் செய்திடத் தொடங்கியவுடன் பிரவுசரில் உள்ள புக்மார்க், ஹிஸ்டரியில் உள்ள தள முகவரிகள் ஆகியவற்றை அலசிப் பார்த்து இந்த சொல் உள்ள அனைத்து தளங்களின் முகவரிகளை வரிசையாகத் தருகிறது. குறிப்பிட்ட சொல் ஒரு தள முகவரியில் நடுவில் இருந்தாலும் அந்த தளம் தரப்படுகிறது. நமக்கு இதுதான் முகவரி என்று தெரிந்த நிலையில் இதுபோல் லிஸ்ட் தரப்படுவது எரிச்சலாக இருக்கும். எனவே எந்த அடிப்படையில் இந்த பட்டியல் தரப்பட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் போல பயர்பாக்ஸ் தொகுப்பிற்கு சிஸ்டம் ரீ பூட் செய்திட வேண்டியதில்லை.
உங்களுடைய நிறுவன இணைய தளங்களில் நிறுவனத்தின் இலச்சினையைப் பதித்துவிட்டல் அவை அழகாக இணைய தளத்தின் முகவரிக்கு முன்னால் தோற்றமளிக்கின்றன. இத்துடன் வழக்கம்போல பாஸ்வேர்ட் மேனேஜர், டவுண்லோட் மேனேஜர் மற்றும் ஆட் – ஆன்ஸ் மேனேஜர் தரப்பட்டுள்ளன. வெப் ஸ்டாண்டர்ட்ஸ் ப்ராஜக்ட் என்னும் அமைப்பு இணையதளத்திற்கான தொழில் நுட்ப கட்டமைப்புகளை ஆய்வு செய்து சோதனைகளை மேற்கொண்டு சரியாக அமைக்கப்பட்டுள்ள பிரவுசர்களுக்கு சான்றளிக்கிறது. அந்த அமைப்பின் சோதனைகளில் இன்னும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தேறவில்லை; ஆனால் பயர்பாக்ஸ் தேர்ச்சி பெற்று சான்று பெற்றுள்ளது. இந்த தொழில் நுட்ப சங்கதிகளை மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8ல் நிறைவேற்றப்போவதாக அறிவித்துள்ளது.
பார்த்துக் கொண்டிருந்த தளத்தின் அந்நேர பக்கத்தை மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கும் போது அளித்தல், உள்ளாக ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ளும் வசதி, ஒருங்கிணைந்த தேடுதல் வசதி, பாப் அப் விண்டோக்களைத் தடை செய்தல், தனிநபர் தகவல்களை கிளியர் செய்தல், இணைய பயன்பாட்டின் பின்னணியில் தளங்களை இறக்கம் செய்தல் எனப் பல கூடுதல் வசதிகளைக் கொண்டு வந்துள்ளது பயர்பாக்ஸ் 3. அட்ரஸ் பாரில் அட்ரஸ் முடிந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ். ஐகானுக்கு முன்னால் புதிய ஸ்டார் ஐகான் ஒன்று தரப்படுகிறது. இதனை ஒரு முறை கிளிக் செய்தால் யு.ஆர்.எல். புக்மார்க்காகப் பதியப்படுகிறது. இரு முறை கிளிக் செய்தால் புக்மார்க் அப்போது உள்ள போல்டர் அல்லது புதிய போல்டரில் பதியப்படுகிறது. இதற்கு டேக் அமைக்கலாம். கீ வேர்டாக ஒரு சொல்லைத் தரலாம். இந்த சொல் நாம் தளங்களைத் தேடுகையில் நமக்கு உதவும். இதில் தரப்பட்டிருக்கும் லைப்ரேரி வசதியின் மூலம் தேடுதலை உருவாக்கவும் சேவ் செய்திடவும் செய்யலாம்.
அடுத்ததாக ஸூம் வசதி. மற்ற பிரவுசர்களைப் போல் அல்லாமல் வியூ மெனு பாரில் ஸூம் வசதி அமைக்கப்பட்டுள்ளது. எப்11 கீயிலும் இந்த வசதி கிடைக்கிறது. முழுப் பக்க ஸூம் வசதி அல்லது சிறிய பக்கம் என இரண்டு வகைகள் கிடைக்கின்றன. சிறிது சிறிதாகப் பெரியதாக்கும் வசதியெல்லாம் இல்லை. இது அநேகமாக அடுத்த பதிப்பில் மாற்றப்படும் என எதிர்பார்க்கலாம்.
பயர்பாக்ஸ் தொகுப்பு 3 ஐ இன்ஸ்டால் செய்தால் தொகுப்பு 2ல் உள்ள புக்மார்க், ஹிஸ்டரி, ஹோம் பேஜ் செட் அப் எல்லாம் போய்விடுமே என்ற கவலை எல்லாம் வேண்டாம். தொகுப்பு 3 முந்தைய தொகுப்பிலிருந்து அனைத்தையும் எடுத்துக் கொள்கிறது. தொகுப்பு 2ன் மூலம் ஏதேனும் இணைய தளத்தை டவுண்லோட் செய்து பாதியில் விட்டு விட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை பதிப்பு 3 தொடர்ந்து தானாக மேற்கொள்கிறது. இவை அனைத்தும் உங்களின் பழைய நண்பர்களாக உங்களை தொகுப்பு 3ல் வரவேற்கும். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பு 2ஐக் காட்டிலும் இத்தொகுப்பு நான்கு மடங்கு வேகமாக இயங்குகிறது.
தொகுப்பு 3 உலகின் 46 மொழிகளில் கிடைக்கிறது. ஆப்ரிக்கான் மொழியிலிருந்து உக்ரேனியன் மொழி வரை இது மொழி பெயர்க்கப்பட்டு அந்த அந்த மொழிகளில் செயல்படுகிறது. தமிழ், இந்தி உட்பட எந்த இந்திய மொழியிலும் இது இல்லை. விரும்புபவர்கள் மொஸில்லா நிறுவனத்திற்கு எழுதலாம். இந்த தொகுப்பின் குறை என்று ஒன்றைச் சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் ஒன்றைக் கூறலாம். புதிய ஜெக்கோ இஞ்சின் இதில் பயன்படுத்தப்படுவதால் இதனை விண்டோஸ் 95,98, எம்.இ., மேக் ஓ.எஸ். எக்ஸ் பதிப்பு 10, 12 மற்றும் முந்தைய பதிப்புகளில் இயக்க முடியாது.
முன்தளம் பின்தளம் செல்லும் அம்புக் குறி சாவித் துவாரம் போல் தோற்றமளிக்கிறது. பிரவுசரின் பிரேம் நாம் இயக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கேற்ற வகையில் (விண்டோஸ், லினக்ஸ், மேக்) வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆட்–ஆன் வசதி:
கூடுதல் உபரி வசதிகளைத் தரும் புரோகிராம்களே ஆட்–ஆன் என அழைக்கப்படுகின்றன. இவை பல இணையதளங்களில் கிடைக்கின்றன. ஆனால் பயர்பாக்ஸ் பதிப்பு 3ல் இவை இணைந்தே தரப்படுகின்றன. ஒரு கீ கிளிக்கில் இவற்றை வேறு இணையதளங்களுக்குச் செல்லாமலே பெறலாம். அத்துடன் மொஸில்லா இணைய தளம் சென்றால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்–ஆன் புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவை அல்லாது இணைய தளங்களை உருவாக்குபவர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையில் உதவிடும் வசதிகள் தரப்பட்டுள்ளன. புதிய டவுண் லோட் மேனேஜர் ஒரு புரோகிராமினை எத்தனை முறை வேன்டுமானாலும் நிறுத்தி டவுண்லோ ட் செய்திட வழி தருகிறது. கீழே காட்டப்படும் நீள் கட்டம் எத்தனை முறை நீங்கள் ஒரு புரோகிராமினை நிறுத்தி நிறுத்தி டவுண்லோட் செய்துள்ளீர்கள் என்று காட்டுகிறது. டவுண்லோட் செய்திடத் தொடங்கி பாதியிலே நிறுத்தியதை கம்ப்யூட்டரை நிறுத்தி விட்டுப் பின் தொடங்கும்போதும் தொடரலாம். புரோகிராம்கள் டவுண்லோட் செய்து முடித்த பின்னர் முழுவதுமாக வைரஸ் எதுவும் தொற்றிக் கொண்டிருக்கிறதா எனச் சோதிக்கப்படுகிறது.
இதில் தரப்பட்டுள்ள பாஸ்வேர்ட் மேனேஜர் புதிய முறையில் செயல்படுகிறது. மற்ற பிரவுசர்கள் போல் ஒரு தளத்தினுள் நுழைகையில் டயலாக் பாக்ஸைக் கொடுத்து உங்கள் செயல்பாட்டின் குறுக்கே வருவது போல் இல்லாமல், நீங்கள் பாஸ்வேர்டினை அமைக்கும்போது “Remember,” “Never for this site,” மற்றும் “Not now” என உங்களுக்குப் பல தகவல்களைத் தருகிறது.
புக் மார்க்குகளை நிர்வகிப்பதிலும் பயர்பாக்ஸ் புதுமையைக் கையாள்கிறது. இவற்றைத் தேடுகையில் Most Visited, Smart Bookmarks, மற்றும் Places என மூன்று விதமான பிரிவுகளையும் அவற்றில் சிலவற்றிலும் உட்பிரிவுகளையும் கொடுத்து புக் மார்க் தேடலையும் இயக்கத்தினையும் எளிதாக்குகிறது. இன்னொரு புதிய வசதி வெப் மெயில் அக்கவுண்ட் வசதி. பி.ஓ.பி. வகை இல்லாத (யாஹூ போன்ற) இமெயில் தளங்களுக்கும் இதில் லிங்க் ஏற்படுத்தலாம். இதனை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் மேற்கொண்டால் வேறுபாடு தெரியும். ஏற்கனவே பயர்பாக்ஸ் தொகுப்பு 2 வைத்திருப்பவர்கள் http://www.getfirefox. com என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தங்கள் தொகுப்பினை 3க்கு மேம்படுத்திக் கொள்ளலாம். இது 45 மொழிகளில் கிடைக்கிறது.
என்ன என்ன மொழிகள் என்று அறிய http://www.mozilla.com/ firefox/all.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இத்தொகுப்பின் புதிய அம்சங்கள் என்னவென்று விபரமாக அறிய http://www.mozilla.com/ firefox /features/ என்னும் முகவரிக்குச் செல்லவும். படித்தறிய பொறு மை இல்லாதவர்கள் என்னும் முகவரிக்குச் சென் றால் இத்தொகுப்பு குறித்த வீடியோ படக் காட்சியைக் காணலாம். அத்துடன் பயர்பாக்ஸ் தொகுப்பை பயன்படுத்தும் புதியவர், ஏற்கனவே சில காலம் பயன்படுத்துபவர் மற்றும் இதில் உள்ள நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தக் கூடியவர் என மூன்று பிரிவுகளாக உதவிக் குறிப்புகள் வழங்கிடும் தளம் http://www.mozilla.com/ firefox/tips/ என்ற முகவரியில் உள்ளது. இந்த தொகுப்பு வெளியிடுவதன் நோக்கம் குறித்த தகவல்கள் http://www. mozilla.com/firefox/3.0/releasenotes/ என்ற முகவரியில் தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
இந்த தொகுப்பில் இணைத் துப் பயன்படுத்தக் கூடிய ஆட்–ஆன் என்னும் கூடுதல் வசதிகளுக்கான புரோகிராம்கள் 5 ஆயிரத்திற்கும் மேலாக உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி பயர் பாக்ஸ் தொகுப்பு இயங்குவதனை, அதன் தோற்றத்தினை, ஐகான்கள் மற்றும் பட்டன்க ளை உங்கள் விருப்பப்படி அமைக்கலாம். இவற்றைப் பெற தனியே தளங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. தொகுப்பிலேயே Tools>Addons என்ற பிரிவுகளுக்குச் சென்று பெறலாம். எப்படியெல்லாம் மாற்றலாம் என்பதற்கான் உதவிக் குறிப்புகள் www.mozilla.com/ enUS/ firefox/customize/ என்ற தளத்தில் உள்ளன.
ஏற்கனவே உள்ள இத்தகைய கூடுதல் வசதி தரும் புரோகிராம்கள் இந்த புதிய பதிப்பிற்குச் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். பயர்பாக்ஸ் 3 அவற்றைச் சோதித்துப் பார்த்துவிட்டுத்தான் ஏற்றுக் கொள்ளும்.
புதிய பதிப்பில் பாதுகாப்பு வசதிகள் மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளன. நம்மை அறியாமல் வந்தமரும் புரோகிராம்களைத் தடுப்பதற்கும் வைரஸ்க ளை அண்டவிடாமல் தடுத்து நமக்கு எச்சரிக்கை தருவதற்குமாய் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த தொகுப்பு ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறந்த நிலை புரோகிராம் என்பதால் பயர்பாக்ஸ் பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வைரஸ் மற்றும் திருட்டு செயல்பாடுகளுக்கான புரோகிராம்களுக்கு எதிராகப் பல ஆட் ஆன் புரோகிராம்களைத் தந்து வருகின்றனர். லேரி என்ற பெயரில் ஒரு கற்பனைப் பாத்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இவர் ஒரு பாஸ்போர்ட் ஆபீசராகப் பணியாற்றுகிறார். நீங்கள் தேடிப் புக இருக்கும் தளங்கள் நீங்கள் அமைத்துள்ள முகவரிக்குள்ளதுதானா அல்லது அந்த பெயரில் இயங்கும் போலியான, தீங்கு விளைவிக்கும் தளமா என்று சோதித்து அனுமதிக்கிறார்.
இந்த கற்பனைப் பாத்திரம் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து அறிய http:// www.mozilla.com/ enUS/firefox/security/ identity/ என்னும் முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த தொகுப் பிற்கு ஆட்டோமேடிக் அப்டேட் வசதி உள்ளது. மொஸில்லா ஆறு அல்லது எட்டு வாரத்திற்கு ஒரு முறை இத்தொகுப்பினை அப்டேட் செய்வதற்கான பைல்களைத் தருகிறது. அத்துடன் இத்தொகுப்பின் பலவீனங்கள் தெரியும் போ தெல்லாம் அவற்றைச் சரி செய்து நிலைப்படுத்தும் புரோகிராம்கள் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிப்பு 2 பயன்படுத்தியவர்கள் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துங்கள். புதியதாக ஒரு பிரவுசரை இயக்கிப் பார்க்க விருப்பப் படுபவர்கள் இதனைப் பெற்று இயக்கலாம். இதன் வேகத்திலும் வசதியிலும் இழுக்கப் பட்டு வேறு தொகுப்புகளுக்குச் செல்ல மாட்டீர்கள் என்று பலர் இதற்கு வாக்களித்துள்ளனர். நீங்களும் சோதனை செய்து பாருங்களேன்.
வெளியே உள்ளே
வரும் விடுமுறை நாட்களில் சிக்காகோவுக்கு சம்மர் வெக்கேசன் செல்கின்றீர்கள் என வைத்துக்கொள்வோம்.இப்போதே ஆன்லைனில் நீங்கள் தங்கவிருக்கும் ஓட்டலின் உள்மாடம், வரவேற்பரை, நடையரங்கு ஏன் உங்கள் 313-ஆவது அறையை கூட பார்க்கும் வகை சீக்கிரத்தில் வந்துவிடும் போலிருக்கின்றது. மிக முக்கியமாய் பார்,பப்களில் இப்போதே ஆன்லைன் வழி நுழைந்து ரெஸ்ட்ரூம் எந்தப் பக்கம் இருக்கின்றது என பார்த்து தெரிந்துகொள்ளலாம். மிகப்பெரிய மால்களின் உள்ளே உங்கள் அபிமான Popeyes chicken & biscuits restaurant எந்தப்பக்கம் இருகின்றது என தேடி மேய்ந்து வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.இந்த வருடம் ஒரு Condo வாங்குவதாய் இருந்தால் இஷ்டத்துக்கும் விற்பனைக்குள்ள பல காண்டோக்களுக்குள்/அப்பார்ட்மென்ட்களுக்குள் புகுந்து நோட்டமிட்டு வெளி வரலாம்.2010 ஆகும் போது விர்சுவல் டூராய் உலகின் எந்த மூலைக்கும் எந்த விலாசத்துக்கும் எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து வரலாம் போலிருக்கின்றது.லைவ் கேமராக்களை இணைத்து விட்டால் இன்னும் சுவாரஸ்யமாய் இருக்கும். இந்த இணையத்தை நினைத்தாலே அப்பா பயமாய்தான் இருக்கின்றது.
மேலே உதாரண படங்கள் நியூயார்க் Sip Sak restaurant-ன் Street View-ம் interior View-ம்
Sip Sak restaurant-ன் Street View சுட்டி-இங்கு நீங்கள் Go Inside-ஐ கிளிக்கினால் அந்த பாரின் உள்ளே எடுத்து செல்லப்படுவீர்கள்.
http://www.everyscape.com/newyork-ny.us.aspx?p=53813&f=124.80&th=-0.10&poi=186733&ct=0
Sip Sak restaurant-ன் interior View சுட்டி
http://www.everyscape.com/newyork-ny.us.aspx?p=359318&f=129.20&th=-8.70&poi=186733&ct=0
ஆயிரத்தோராவது பிரச்சனை
பிரபலங்களுக்குள்ள ஆயிரம் பிரச்சனைகளில் இது ஆயிரத்தோராவது பிரச்சனை. நிம்மதியாக எங்கும் போக முடிவதில்லை. எப்போதும் யாரோ தன்னை கேமராவில் கண்காணித்துக் கொண்டிருப்பது போன்றே தோன்றும் துபாய் போனால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, தென் ஆப்ரிக்கா போனால் கூட அட சுதந்திரமாக அங்கு குளிக்க முடிவதில்லை, மும்பை போய் ஒரு துணிமணி எடுக்கலாமெனில் ஷாப்பிங் மால்களின் டிரஸ்ஸிங் ரூம்களுக்குள் போகவே பயமாயிருக்கிறது.Pinhole அதாவது குண்டூசி அளவேயான மறைந்திருக்கும் கேமராக்கள் உங்களை படம்பிடித்துக் கொண்டிருக்கலாம்.படுக்கை அறையில் சாதாரண கடிகாரம் தானே இருக்கின்றது என அந்த பிரபலம் நினைக்க ஆனால் அதற்குள் தான் அந்த மர்ம காமரா ஒளிந்திருக்கும்.மேஜையில் புசு புசுவென இருக்கும் டெட்டிபியர் கரடி பொம்மையை எடுத்து கொஞ்சலாம் போல் தோன்றும் ஆனால் அதற்குள்ளே தானே அவருக்கு ஒளிந்திருக்கு ஆப்பு (காமெரா).ஏன் ஜேம்ஸ்பாண்ட் கணக்காலும் சாதாரண சட்டைபொத்தான் வடிவில் கூட ஹிடன் கேமராக்கள் இப்போது வந்துள்ளன.
இவற்றிலிருந்து தப்ப வழி இருக்கின்றதா?
அந்த காலத்தில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருந்த பல ரகசிய தொழில் நுட்பங்கள் இன்று சாதாரண குடிமகன்கள் கைக்கு எட்டும் அளவுக்கு வந்துவிட்டன. உதாரணமாய் GPS-ஐ சொல்லலாம்.சில வருடங்களுக்கு முன்பு வரை மிலிட்டரி பயன்பாடுகளுக்கு மட்டுமே அது பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது கோபால் கூட ஒன்றுக்கு இரண்டு வைத்திருக்கின்றான்.இன்றைய அளவில் இராணுவ அல்லது அரசின் பிரத்தியேக உபயோகத்துக்கென இருக்கும் ரகசிய தொழில் நுட்பங்கள் என்னென்னவோ யாருக்குத் தெரியும். தெரிய வந்தால் நமக்கு அநாவசியமாய் திகில் தான் பிடிக்கும்.
பெரும்பாலும் 2020-யில் அது வெளி உபயோகத்துக்கு வந்து நான், ஒரு ரேடியோ பெட்டியூண்டு அளவிலுள்ள தானியங்கி மினி நானோ-ஹெலிக்காப்டரில் வைத்து நியூயார்க்கிலிருந்து சென்னையிலிருக்கும் என் ஆசானுக்கு பரிசுபொருள் ஒன்றை கூரியர் போல அனுப்புவேன். அந்த கால தூதுபோன புறாபோல சென்னைபோய் திரும்ப என்னிடம் வரும்.கொஞ்சம் ஓவர் கற்பனையோ?
அதுவரை நியூயார்க் தாக்குபிடிக்கவேண்டும்.அணுஆயுத போர் வந்தால் அது தான் முதல் டார்கெட் அப்படி இப்படினு பலரும் பலதாய் பேச அது பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.கலிபோர்னியா போகலாமெனில் அங்கு ஒரு மாபெரும் பூமியதிர்ச்சி வர காத்திருக்கின்றதாம்.டிக் டிக்... திக் திக்...
நிற்க
இது போல முன்பு அரசு பயன்பாட்டிலிருந்து இப்போது பொதுவில் வந்துள்ள ஒரு கருவி தான் Spy Finder Hidden Camera Detector/Locator.இது என்னமோ principle of optical augmentation முறைப்படி வேலை செய்கின்றதாம். இந்த கையடக்க கருவி வழி சுற்றும் முற்றும் பார்த்தால் எங்காவது Hidden Camera இருந்தால் அது உடனே உங்களுக்கு காட்டிகொடுத்து விடுமாம்.
கலியுகத்தில் இது ஒரு நல்ல பரிசுபொருளோவென தோன்றுகின்றது. ஏதோ ஒரு இணையபக்கத்தில் அவரை பாவம் அப்பாவி ஏமாந்தவராய் பார்க்கமாட்டோம்.
ரேப்பிட் வைரஸ்கள்
விண்டோஸ் எக்ஸ்பியில் அடிப்படையிலேயே பயர்வால் ஒன்று ஓடிக்கொண்டே உள்ளதால் இப்போதெல்லாம் வைரஸ்கள் தானாக வந்து உங்கள் கணிணியை தாக்குவது அபூர்வமே.மாறாக நாமாகப் போய் வலிய வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டால் தான் உண்டு.ஏடாகூடாமான தளம் எதற்காவது போய் அங்கு தோன்றும் ஒரு பாப் அப் விண்டோவில் "Yes" சொல்லி வைரஸை விலைக்கு வாங்கும் ரகம் பாமர கணிணி பயனர்கள் ரகம் எனில் தேடிப்போய் ஒரு குறிப்பிட்ட ".exe" கோப்பை ரேப்பிட்ஷேரிலிருந்தோ அல்லது இது போன்ற இன்ன பிற கோப்புகிடங்குகளிலிருந்தோ இறக்கம் செய்து அது வழி வைரசை தங்கள் கணிணிக்கு இறக்குமதி செய்யும் ரகம் கீக் (Geek) கணிணி பயனர்கள் ரகம்.
எதாவது ஒரு பயன்பாடு வேண்டுமெனில் உடனே அதற்காக பட்டென ஏதாவது ஒரு ரேப்பிட்சேர் சுட்டியிலிருந்து அதை இறக்கம் செய்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. முடிந்த வரைக்கும் நம்பகமான தளத்திலிருந்து மட்டுமே "எக்சிகியூட்டபிள்"-களை இறக்கம் செய்வது நல்லது. அல்லது இறக்கம் செய்ததும் நன்றாக ஸ்கேன் செய்ய ஒரு நல்ல வைரஸ் ஸ்கேனராவது உருப்படியாய் வைத்திருத்தல் வேண்டும்.
MP3 கோப்புகள், வீடியோ கோப்புகள், PDF கோப்புகள் ,சில சமயம் CBTகள் இது தவிர பிற வகை கோப்புகளை முக்கியமாய் exe கோப்புகளை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் ஓட விடுதல் அத்தனை பாதுகாப்பான பழக்கம் அல்லவே. எவர் என்ன நோக்கில் அந்த மென்பொருளை அங்கு சேமித்து வைத்துள்ளாரோ? அதனுள் ஏதாவது வைரசோ அல்லது பிற மர்ம ட்ரோஜன்களோ ஒளிந்திருந்தால் அது நமக்கு சுத்தமாய் தெரிவதில்லை. நம்மில் பலரும் வைரசில் மாட்டிவிடல் இப்படித் தான்.
அது இப்படி இருக்க, இங்கே ஒரு டிப்.
ரேப்பிட்சேரில் 100MB-க்கும் பெரிதான கோப்புகளை சேமிக்க முடியாததாகையால் டிவிடிக்களை நூறு நூறு Meg-காக பல .rar துண்டுகளாக்கி ஒரு குழுவாக இணைஏற்றம் செய்து வைத்திருப்பார்கள். பத்து .rar கோப்புகளில் ஒன்பதை பல மணிநேரமாய் இறக்கம் செய்த பின் 10வது இறக்கமாக மறுக்கும். அனைத்தையும் இறக்கம் செய்யாமல் Winrar-ம் அவ்வீடியோவை Extract செய்யவிடாது. ஒரே டென்சனாகிப் போகும். குறைந்தது இறக்கம் செய்துள்ள அந்த ஒன்பது .rar கோப்புகளில் உள்ள வீடியோவையாவது பார்க்க வழியுள்ளதா?
ஆம் உள்ளது.
அந்த .rar கோப்புக் குழுவை விரிவாக்கம் செய்யும் முன் மறக்காமல் "Keep broken files" -ஐ Winrar-ல் டிக் செய்துகொள்ளுங்கள்.(படம்)
பத்தாவதை பார்க்க இயலாவிட்டாலும் மற்ற ஒன்பதையாவது பார்க்கலாம்.
பைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர்
அண்மையில் மிகப் பயனுள்ள புரோகிராம் ஒன்றைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுகுறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் எழுதப்படுகையில் வரிசையாகத்தான் முதலில் எழுதப்படும். காலப் போக்கில் பைல்களை அழித்து அழித்து புதிய பைல்களை எழுதுகையில் அவை ஹார்ட் டிஸ்க்கில் தொடர்ந்த இடத்தில் எழுதப்படாமல் விட்டு விட்டு பல இடங்களில் பிட்டு பிட்டாக எழுதப்படும். ஆனால் கம்ப்யூட்டர் இயக்கம் அவற்றைச் சரியாகக் கோர்வையாகப் படித்து நமக்குத் தரும். இவ்வாறு விட்டு விட்டு பிட்டு பிட்டாக இருக்கும் பைல்களை மீண்டும் சரியாகத் தொடர்ச்சியாக அமைப்பதற்கு உதவிடும் புரோகிரம் தான் டிபிராக் புரோகிராம் ஆகும். | |
இதில் என்ன பிரச்னை என்றால் டிபிராக் செய்கையில் ஹார்ட் டிஸ்க் முழுவதும் அல்லது ஒரு குறிப்பிட்ட டிரைவ் முழுவதும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அளவில் பெரிய பைல் ஒன்றை அமைக்கிறீர்கள். நீங்கள் டிபிராக் செய்து நாள் ஆகிவிட்டது என்றால் நிச்சயமாய் அந்த பைல் பல பிட்டுகளாகத்தான் எழுதப்படும். இந்த பைலை மட்டும் டிபிராக் செய்து சரியாக ஓரிடத்த்தில் அமைக்க முடியுமா? முடியும் என்கிறது அண்மையில் நான் பார்த்த டிபிராக்ளர் (Defraggler) என்ற புரோகிராம். இனிமேல் அனைத்து பைல்களையும் நீங்கள் டிபிராக் செய்திடத் தேவையில்லை. குறிப்பிட்ட பைலை மட்டும் இந்த புரோகிராம் மூலம் டிபிராக் செய்து கொள்ளலாம். முழு டிரைவினையும் டிபிராக் செய்திடவும் இந்த புரோகிராம் வழி வகுக்கிறது. இந்த புரோகிராமின் இன்னொரு வசதி என்னவென்றால் இதனை எளிதில் எடுத்துச் செல்லலாம். மிகச் சிறிய கட்டமைப்பில் இது உருவாக்க பட்டுள்ளது. அதனால் ஒரே ஒரு சிறிய எளிய இ.எக்ஸ்.இ. பைலாக இது நமக்குக் கிடைக்கிறது. எனவே இதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து எடுத்துச் சென்று எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம். இந்த பைல் 1 எம்பி அளவிலேயே இருக்கிறது.
உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எப்படி இந்த அளவிலான சிறிய பைல் டிபிராக் பணியை மேற்கொள்கிறது? என்ற கேள்வி எழலாம். இதற்கு நீங்கள் செயல்முறையிலேயே தெரிந்து கொள்ளலாம். டிபிராக்ளர் புரோகிராமினை முதலில் www.defraggler.com/download என்ற இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அதன்பின் மற்ற புரோகிராம்களை இயக்குவது போல இயக்குங்கள். அதன்பின் உங்கள் கம்ப்யூட்டரில் எந்த எந்த புரோகிராம்களை அல்லது போல்டர்களை டிபிராக் செய்திட வேண்டுமோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் அவற்றை டிபிராக் செய்திட கட்டளை கொடுக்கலாம். டிபிராக்ளர் அந்த பைல்களை டிபிராக் செய்துவிட்டு வெற்றிகரமாக செய்ததாக உங்களுக்கு அறிவிக்கும். டிபிராக் செய்திட முடியாத பைல்களின் பட்டியலைத்தரும். அத்துடன் இன்னும் டிபிராக் செய்யப்பட வேண்டிய பைல்கள் என்று ஒரு பட்டியலையும் தரும். பட்டியலில் உள்ள அந்த பைல்களின் மீது கிளிக் செய்தால் அந்த பைல்கள் எங்கு இருக்கிறது என்பதனையும் அவை ஏன் டிபிராக் செய்யப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் கண்கூடாகப் பார்க்க முடியும். டிபிராக்ளர் விண்டோஸ் 2000, 2003, எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செயல்படுகிறது.
அண்மையில் 64 பிட் சிஸ்டத்தில் இயங்கும் வகையிலும் டிபிராக்ளர் மாற்றம் செய்யப்பட்டு தரப்பட்டுள்ளது. CCleaner என்ற புரோகிராம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த புரோகிராமினைத் தயாரித்து வழங்கிய Piriform என்ற நிறுவனம் தான் இதனையும் தயாரித்து வழங்குகிறது.