7.12.08

டாடா ஸ்கை ப்ளஸ்


டிவியில் வரும் லைவ் நிகழ்ச்சிகளைக் கூட ரீவைண்ட் செய்து பார்க்கும் வசதியுடன் டாட்டா நிறுவனம் டாட்டா ஸ்கை ப்ளஸ் என்ற சேவையைக் கொண்டு வந்துள்ளது. இதற்கென வழங்கப்படும் செட் டாப் பாக்ஸ், டிவி நிகழ்ச்சிகளைத் தேவைப்படும்போது நிறுத்திப் பின் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கும் வசதி, ரீவைண்ட் செய்து நாம் விரும்பும் இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஆகியவற்றைத்தருகிறது. ஆம், நேரடியாக மைதானத்திலிருந்து ஒளிபரப்பாகும் கிரிக்கெட் போட்டியை லைவாகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா! இடையே தேடி வரும் நண்பரைத் தவிர்ப்பதற்காக இன்னொரு ரூமுக்குள் சென்று ஒளிந்து கொள்ள திட்டமா? போட்டி நிகழ்ச்சியை அப்படியே தற்காலிகமாக நிறுத்திப் பின் அவர் போன பின்பு மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க் கலாம். ஆச்சரியமாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.

1990 ஆம் ஆண்டு வாக்கில் பல வீடுகளில் டிவியும் வி.சி.ஆர் எனப்படும் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்திடும் சாதனமும் பெருகி இடம் பிடித்தன. வி.சி.ஆர். சாதனமும் வீடியோ டேப்பும் அடங்கக் கூடிய விலையில் கிடைத்ததால் எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தினார்கள். ஆனால் நாம் வீட்டில் இல்லாத போது ஒளிபரப்பாகும் டிவி நிகழ்ச்சியைப் பதிவு செய்வதற்கு வி.சி.ஆர் சாதனத்தை புரோகிராம் செய்வது சற்று கடினமாக இருந்து வந்தது. ஆனால் டிவிடி பிளேயர் வந்தவுடன் இவற்றின் பயன்பாடு முற்றிலுமாக காணாமல் போனது. ஆனால் நிகழ்ச்சிகளை ஒளி பரப்புகையில் பதிய வேறு சாதனம் கிடைக்காமல் இருந்தது.


2008 ஆம் ஆண்டிலிருந்து செட்டாப் பாக்ஸ்கள் வெளியாகி நமக்குக் கை கொடுத்தன. இப்போது அனைத்து வீடுகளிலும் இது இடம் பெறத் தொடங்கி உள்ளன. இந்த பாக்ஸ் மூலம் நாம் விரும்பும் டிவி சேனல்களை நேரடியாகப் பெற்று பார்க்க முடிகிறது. இந்த வகையில் செட் டாப் பாக்ஸில் வியத்தகு முன்னேற்றத்தினைக் கொண்டு வந்துள்ளது டாட்டா ஸ்கை ப்ளஸ் சேவை. இதன் மூலம் டிவி சேனல்களைமட்டுமின்றி முன்பு நாம் வி.சி.ஆர். மூலம் மேற்கொண்ட வசதிகளையும் அனுபவிக்க முடிகிறது. கீழ்க்காணும் வசதிகள் இதன் மூலம் தரப்படுகின்றன.


லைவ் நிகழ்ச்சிகளைத் தற்காலிகமாக நிறுத்திப் பின் விட்ட இடத்திலிருந்து தொடர்தல், இரண்டு புரோகிராம்களை ஒரே நேரத்தில் பதிந்து கொள்ளும் வசதி; அல்லது ஒன்றைப் பார்க்கும் நேரத்தில் மற்றதைப் பதிந்து கொள்ளும் வசதி. எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் இயங்கும் வசதி. சீரியல் நிகழ்ச்சிகளைத் தானாகப் பதியும் வசதி.


தற்காலிகமாக நிறுத்தலாம்; ஆனால் எப்படி மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடர முடியும் என்பது பலரின் மனதில் எழும் கேள்வி, இல்லையா? இது எப்படி சாத்தியமாகிறது என்று பார்க்கலாம்.


நீங்கள் எப்போது ஒரு சேனலை ட்யூன் செய்தாலும் உள்ளே உள்ள பபர் மெமரி எனப்படும் தற்காலிக நினைவகம் நிகழ்ச்சியினை சேவ் செய்திடத் தொடங்குகிறது. நீங்கள் அதனை ரெகார்ட் செய்கிறீர்களோ இல்லையோ, பபர் மெமரியில் நிகழ்ச்சி பதிவாகிறது. ஆனால் நீங்கள் அடுத்த சேனலுக்கு மாறினால் உடனே முந்தைய சேனலின் பதிவான நிகழ்ச்சிகள் அழிக்கப்பட்டு மாறிய சேனலின் நிகழ்ச்சிகள் பதிவு பெறத் தொடங்குகின்றன. எனவே மீண்டும் விட்ட இடத்திலிருந்து பார்க்கும் வசதி ஒரு சேனலுக்கு மட்டுமே கிடைக்கிறது.


இந்த டாட்டா ஸ்கை ப்ளஸ் உள்ளே 160 ஜிபி கொள்ளளவு திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்கினைக் கொண்டுள்ளது. இதில் 45 மணி நேர வீடியோ நிகழ்ச்சிகளைப் பதிந்து வைக்கலாம். உள்ளே இரண்டு ட்யூனர்கள் இருப்பதால் இரு வேறு நிகழ்ச்சிகளை இதில் பதியலாம். பின் நேரம் இருக்கையில் மீண்டும் இவற்றைப் பார்க்கலாம்.


சீரியல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது குறித்துப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றை நீங்கள் பதிவு செய்திட விரும்பினால் அதற்கான வசதியை இந்த செட் டாப் பாக்ஸ் கொண்டுள்ளது. எடுத்துக் காட்டாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை உங்களுக்குப் பிடித்த பக்தி அல்லது அரசியல் நிகழ்ச்சி ஒன்று குறிப்பிட்ட சேனலில் ஒளி பரப்புவதாக வைத்துக் கொள்வோம். இந்த வசதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு வாரமும் அந்த நேரத்தில் ஒளி பரப்பாகும் நிகழ்ச்சியைப் பதியும் படி செட் செய்திடலாம். நீங்கள் வீட்டில் இருந்தாலும் இல்லை என்றாலும் அது பதிவு செய்யப்படும்.


பழைய டாட்டா ஸ்கை செட்டாப் பாக்ஸ் எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. ஸ்கை ப்ளஸ் செட் டாப் பாக்ஸ் இப்போது அதிவேகமாகப் பரவி வரும் எம்பெக் 4 தொழில் நுட்பத்தில் செயல்படுகிறது.


இது ஒரு கம்ப்ரஸன் ஸ்டாண்டர்ட் தான். இதனால் ஏற்கனவே கிடைத்து வரும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் மிகப் பெரிய அளவில் துல்லிதமான சிறந்த ஒளி பரப்பு கிடைக்கும் என்றில்லை. தொழில் நுட்பத்தில் தான் வேறுபாடு. ஏற்கனவே எம்பெக் 2 தொழில் நுட்பத்தில் வரும் நிகழ்ச்சிகளும் சிறப்பாகவே கிடைத்து வருகின்றன.


அருமையான கருப்பு வண்ணத்தில் இந்த செட் டாப் பாக்ஸ் ப்ளஸ் கிடைக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து எல்.சி.டி. டிவிக்களுடன் இது இணைந்து செல்லும். உடன் வரும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம் பழையதைப் போலவே காட்சி அளித்தாலும் கூடுதலாகப் பல பட்டன்கள் தரப்பட்டுள்ளன. பிளே / தற்காலிக நிறுத்தம், பார்வேர்ட் / ரீவைண்ட், ரெகார்ட் மற்றும் பிளான் செய்திட பட்டன்கள் தரப்பட்டுள்ளன. நிறைய போர்ட்கள் தரப்பட்டுள்ளன.


எஸ்–வீடியோ, கோ–ஆக்ஸியல், எஸ்பி டி.ஐ.எப்., ஆகிய சாதனங்களுக்கான போர்ட்கள் தரப்பட்டுள்ளன. யு.எஸ்.பி., ஈதர்நெட், மோடம் ஆகியவற்றிற்கானவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


இதன் யூசர் இன்டர்பேஸ் பழைய டாட்டா ஸ்கை ரிமோட் போலவே உள்ளது. பார்ப்பதற்கு கண்கவர் தோற்றத்தில் பழகுவதற்கு எளிதாகவும் உள்ளது. டிவி நிகழ்ச்சியினைத் தேர்ந்தெடுத்து ரெகார்ட் செய்யத் தொடங்கியவுடன் என வட்டமாக ‘R’ ஒளி தெரிகிறது. எவ்வளவு நேரம் ரெகார்டிங் நடைபெற்றுள்ளது என்றும் தொடர்ந்து காட்டப் படுகிறது. பிளான் மெனு மூலம் ஏற்கனவே ரெகார்ட் செய்த நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம்.

பதிவு செய்த நிகழ்ச்சிகளில் எவை எல்லாம் பார்க்கப்பட்டது எனவும் அறியலாம். டிஸ்க் ஸ்பேஸ் எவ்வளவு பயன்படுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு மீதம் எனவும் அறியலாம். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் சிலவற்றை சிறுவர்கள் பார்க்கக் கூடாது என நீங்கள் விரும்பினால் அவற்றிற்கு 4 இலக்க கோட் எண்கள் கொடுத்து பாதுகாக்கலாம்.


இன்ஸ்டலேஷன், ஆக்டிவேஷன் கட்டணங்கள் அனைத்தும் சேர்ந்து ரூ.10,000 என இதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டாட்டா ஸ்கை ப்ளஸ் பயன்படுத்த மாதக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும்.


அறிமுகச் சலுகையாக இந்த கட்டணம் வாழ் நாள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டாட்டா ஸ்கை வைத்திருப்பவர்கள் இதற்கு மாறிக் கொள்ள ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையில் கட்டணம் செலுத்தி மாறிக் கொள்ளலாம். மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் ஒப்பிடுகையில் இதற்கான கட்டணம் சற்று அதிகம் தான். ஆனால் இத்தகைய சர்வீஸ் தற்போதைக்கு டாட்டா நிறுவனம் ஒன்று தான் தருவதால் வேறு வழியில்லை. ஒப்பிடவும் முடியாது. வரும் மார்ச் மாதத்திற்குள் வாங்குபவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கட்டணம் இல்லை என்பதால் இது போன்ற ஒன்றை வாங்க வேண்டும் என விரும்புபவர்கள் இதனை வாங்கலாம். எனக்குப் பிடித்த சேனலை இவன் பார்க்க விட மாட்டேங்கிறான் என சிறுவர்களுக்குள் மட்டுமல்ல, மாமனார் மருமகள் இடையே கூட வீடுகளில் சண்டை நடக்கிறது; மன வருத்தம் ஏற்படுகிறது. இந்த வருத்தங்கள் இல்லாமல் வீடு அமைதியாக இருக்க வேண்டும் என்றால் இதற்கு செலவழிப்பது ஒன்றும் வீணாகாது.