14.1.09

மனித நேயம் vs விலங்கு நேயம்

இயந்திரமயமான நம் வாழ்க்கை பாதையிலே, நாம் எங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். எவருக்கு என்ன நடந்தாலும் நம்முடைய வேலைகளை பார்த்துக்கொண்டு போய்ட்டே இருக்கின்றோம். இதுதான் இயந்திர வாழ்க்கை என்கிறார்கள். மனிதம் என்ற ஒன்று இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. மனிதம் செத்துப்போய், மனிதன் என்ற பெயருடன் வாழ்வதில் என்ன பயன்...? அப்படி வாழ்பவர்கள்தான் இன்று உலகத்திலே அதிகமாக இருக்கின்றார்கள்.

குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்கிறார்கள். இதில் பல மாற்றுக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் குரங்கிற்கும் மனிதனுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அதனால்தான் முதல் பரிசோதனைகளுக்காக குரங்கினைப் பயன்படுத்துகிறார்கள் விஞ்ஞானிகள். இங்கு நான் சொல்ல வந்தது நெஞ்சை உருக்கும் ஒரு சம்பவம்.

பாதையிலே எவர் காயப்பட்டுக் கிடந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்கு முன்வருபவர்கள் அரிதே. இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இயந்திரமயமான வாழ்க்கையில் நின்று அடுத்தவன் பிரச்சினையைப் பற்றி யோசிப்பதற்கு நேரமின்மை. மற்றையது, தேவையில்லாத பிரச்சினைகளில் தலைபோட்டால் நாங்கள் மாட்டிக் கொள்வோமா என்ற பயம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன.

ஆனால், இந்தக் குரங்கினைப் பாருங்கள். தன்னுடைய குட்டி, வாகனத்தில் அடிபட்டுவிட்டது. அடிபட்ட குட்டியினைத் தாக்குவதற்கு நாய் முயற்சிக்கிறது. துணிந்து போராடி, நாயினை விரட்டியடிக்கிறது தாய்க்குரங்கு. இதுதான் தாய்மை என்பது. தன் உயிரைப் பணயம் வைத்தாவது தன் குழந்தையைக் காப்பவள் தாய். அந்தத் தாயின் அன்பிற்கு நிகர் வேறு எதுவுமே கிடையாது. இந்த உலகத்தில் மட்டுமல்ல எந்த உலகத்திலும் அந்த அன்பு கிடைக்காது.

மனிதம் செத்துக்கொண்டிருக்கும் இயந்திர உலகில், இந்தக் குரங்கில் செயல் சற்று திருப்தியளிக்கிறதல்லவா?

Thanks .apmathan blog- Mathumathi