17.10.08

உண்மையான பணக்காரன்

அவன் பெயர் மணி. ஆனால் இவ்வூர்காரர்கள் உச்சரிப்பில் அவனை மாணி என்றாக்கி விட்டார்கள். 2001-ல் 400K விலை கொடுத்து நியூஜெர்சியில் ஒரு வீட்டை வாங்கினான். 2006-ல் அவன் தன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான்.600K வென சொல்லிப் போனார்கள். அதாவது 200K லாபம். மகிழ்ச்சியில் கொண்டாடினான். இஷ்டத்துக்கும் செலவு செய்தான். சேமிக்க ரொம்பவும் யோசித்தான். மீண்டும் இவ்வருடம் அவன் வீட்டு மதிப்பை வல்லுனர்களை வரவழைத்து கணக்கிட்டான். 375K என்றார்கள். மாணிக்கு மாரடைப்பே வந்துவிட்டது. இப்போது சொல்லுங்கள், அவனுக்கு 225K நஷ்டம் வர யார் காரணம்? அப்பணம் எங்கே போனது? யாராவது கொள்ளை கொண்டு போனார்களா? அல்லது அரபுநாட்டுக்குப்போனதா? இல்லையே. இப்படித்தான் பில்லியன்கணக்கில் டாலர்கள் வால்தெருவில் காற்றில் கரைந்து போயின. ஃபைனான்ஸ் வங்கிக்காரர்களால் சொல்லப்பட்டு வந்த பெரிய புள்ளிவிவர எண்களெல்லாம் வெறும் fake number-களாகிப்போயின.

இப்படி செயற்கையாய் போலி எண்களால் உருவான போலி பிரமாண்டம் இப்படி அநியாயத்துக்கும் விழுந்து நொறுங்கியது ஒரு வகையில் நல்லதே. தன்னைத்தானே சரிசெய்து கொள்ள பொருளாதாரம் என்ற அந்த அப்பாவி முயன்றது. ஆனாலும் அதை தன்னைத்தானே சரிசெய்ய விடாமல் அந்த போலி எண்களை காப்பாற்ற நிஜமாய் நோட்டுகள் அடித்து பணத்தின் மதிப்பை வெகுதாழ கொண்டு செல்லவிருக்கின்றார்கள். தற்காலிகமாய் சந்தையை காப்பாற்ற உலவ விடப்படும் பல நூறு பில்லியன் டாலர்கள் தீர்வானது கார் இஞ்சின் இரைச்சலை போக்க வானொலி சத்தத்தை அதிகப்படுத்துவது போன்றதாகும். நிஜ ஆரோக்கியத்தை அது தராது. எனினும் இன்னொரு கிரேட் டிப்ரசனை தவிர்க்க உலகநாடுகள் இதில் அபூர்வமாய் ஒருங்கிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு ரெசர்வ் பாங்கின் அவசியத்தையும் உலகளாவிய ஒரே கரன்சியின் அவசியத்தையும் இச்சிக்கல் நமக்கு வலியுறுத்தியுள்ளது.

இனி என்ன நடக்கும்.இன்று போல் தொடர்ந்து பங்குசந்தைகள் முன்னேறி நிலமை சரியானால் இன்னும் விலைவாசி இரண்டு மடங்கு ஏறும்.டாலர் அப்படியே கீழாக குட்டிகரணமடிக்க தங்கமும் பெட்ரோலும் விர்ரென மேலே ஏறத்தொடங்கும்.சந்தையில் புழக்கத்தில் விடப்பட்ட பணங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சாதாரண ஜனங்களை வந்து எட்டும்.வந்து நிறையவே வாட்டும்.அது அப்படியே போய்விட்டால் நல்லது.இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலேபோய் ஹைப்பர் இன்ஃபிளேசன், ஃபுட் ரையாட்ஸ், மார்சியல் லா, மில்லியன் பேர்களை அடைக்க வசதி கொண்ட ரகசிய அண்டர்கிரவுண்ட் ஜெயில்கள், கவர்ண்மென்ட் கிராஷ் அப்படி இப்படியென பல கதைகள் சொல்கின்றார்கள்.

இந்த விளையாட்டில் அணில் அம்பானி இழந்தது 30 பில்லியன் டாலர்களாக்கும். சம்பாதிப்பது மட்டுமல்ல சம்பாதித்ததை தக்கவைப்பததற்கும் ரொம்ப பிராயசப்படவேண்டியிருக்கின்றது. இப்போதெல்லாம் தினமும் நிம்மதியாய் உங்களால் தூங்கமுடிகிறதென்றால் நீங்கள் தான் உண்மையான பணக்காரர்.

தேங்க்ஸ் pkp